Sunday, 16 October 2016

கண்டர கூளி என்னும் பெயர் பெற்ற வேளிர் மன்னர்கள்

வேளிர் குல மன்னர்களும் அவர்களின் வழிவந்தவர்களும் பயன்படுத்திய பல சின்னங்களில் "கண்டப்பேரண்டப் பறவையும்" ஒன்றாகும். சங்க இலக்கியங்களில் இந்த பறவையைப் பற்றிய குறிப்புகள் இருப்பதாக புலவர் முத்துஎத்திராசன் ஐயா அவர்கள் ஒருமுறை என்னிடம் தெரிவித்தார்கள். இப்பறவையானது இருதலைகளையும் ஓர் உடலையும் கொண்ட "கழுகு" போன்ற தோற்றத்தை உடையதாகும்.
கடையெழு வள்ளல்களில் ஒருவரான "கண்டீரக் கோப்பெரு நள்ளி" என்ற வேளிர் மன்னர், "கண்டீரன்" என்ற பெயரினைப் பெற்றிருந்தார்கள். இதைப்போலவே வேளிர் குல மன்னர்களான "ஹொய்சாளர்கள்" மற்றும் "விஜயநகர பேரரசர்களின்" உறவினர்களான "மைசூர் உடையார்களும்" தங்களை "ஸ்ரீ கண்டீரவன்" என்றே குறிப்பிடுகிறார்கள். இவர்களது சின்னம் "கண்டப்பேரண்ட பறவையாகும்". இச் சின்னமானது இன்றைய கர்நாடக மாநிலத்தின் சின்னமாகும்.







வன்னிய குல சம்புவராய மன்னர்களுக்கு உறவினரான, விஜயநகர பேரரசர் வீர கம்பண்ண உடையாரின் தளபதிகளும், "கண்டர கூளி" என்ற பெயரினைப் பெற்றிருந்தார்கள் என்பதனை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. தமிழ் அகராதி "கூளி" என்பதற்கு "பெரும்கழுகு" என்ற பொருளையும் குறிப்பிடுகிறது. எனவே "கண்டர கூளி" என்பது வேளிர்களின் ஒரு பெயராகும்.
விஜயநகர பேரரசர்களுக்கு உறவினர்களும் தளபதிகளுமான "சாளுவ மங்கு", "சாயண உடையார்", "மாராய நாயக்கர்" போன்றோர்கள், வீர கம்பண்ண உடையாருக்கு பலவெற்றிகளை தேடிக்கொடுத்தார்கள். "மதுரை சுல்தான்களை" விரட்டியடித்து மீண்டும் பாண்டியர் ஆட்சியை மதுரையில் நிறுவியவர்கள் இவர்களேயாவார்கள். இவர்கள் தங்களை கீழ்கண்டவாறு கல்வெட்டுகளில் குறிப்பிடுகிறார்கள் :-
"ஸ்ரீமத் கம்பண உடையார் மஹாப்ரதாநி ஸோமய தண்ணாயக்கர் குமாரன் ஸ்ரீ கண்டர கூளி மாராய நாயக்கர்" (A.R.E. No.267 of 1919)
"ஸ்ரீமது மகாமண்டலீசுர மேதினி மீசுர கண்டக் கட்டாரி சாளுவ திருபுவன இராய கண்டரகூளி விபாட இராய பக்ஷி சாளுவ சாவண தேவமகாராசா" (A.R.E. No.195 of 1936 - 37)
"ஸ்வஸ்திஸ்ரீமது மஹாமண்டலீசுரன் மேதினி மீசுர கண்ட கட்டாரி சாளுவ திருபுவன ராய ஸ்தாபநாசாரிய திருபுவன இராய கண்டர கூளி தக்ஷண சூரத்தான் ஸாளுவ ஸாளுவ மங்கு தேவமஹாராஜா" (A.R.E. No.191 of 1936 - 37)
வேளிர் குல மன்னர்களான "சாளுவ மங்கு", "சாயண உடையார்", "மாராய நாயக்கர்" போன்றோர்கள் "கண்டர கூளி" என்ற பெயரினைப் பெற்றிருந்ததைப் போன்றே, வன்னிய மன்னர்களான சம்புவராயர்களும் சோழர்களது ஆட்சிக்காலத்தில் "கண்டர கூளி" என்ற பெயரினைப் பெற்றிருந்தார்கள். மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் கல்வெட்டு ஒன்று :-
"செங்கேணி அம்மையப்பன் பாண்டிநாடு கொண்டான் கண்டர கூளியனான இராசராசக் சம்புவராயர்" (S.I.I Vol-VII, No.453)
என்று குறிப்பிடுகிறது. எனவே வன்னிய மன்னர்களான சம்புவராயர்கள் தங்களை "கண்டர கூளியன்" என்று மிகத் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள். சாளுவராய (சாளுக்கிய) மன்னர்களான சாளுவ மங்குவும், சாளுவ குண்டாவும் மற்றும் அவர்களது மரபினர்களும் "யது வம்ச யாதவர்கள்" (சந்திர குல க்ஷத்ரியர்கள்) என்றே குறிப்பிடப்பட்டார்கள். மேலும் இவர்கள் சம்புவராயர்களின் வழிமரபினர்கள் என்றும் குறிப்பிடப்படுகிறார்கள். (Sambuvarayas belonged to the same saluva family of Mangu - apparently to a senior branch of it), (Epigraphia Indica, Vol-VII, Page-76).
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்திலும் மற்றும் கிருஷ்ணா மாவட்டத்திலும் இருக்கும் கல்வெட்டுகள் (கி.பி.1428), கன்னட தேச சம்புவராயனின் மகனான தெலுங்குராயன் என்ற அரசனைப் பற்றி கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது :-
"மஹாமண்டலேஸ்வர மீசார கண்ட கத்தாரி சாளுவ தெலுங்குராயன்" (Mahamandalesvara Misaraganda Kathari Saluva Telunguraya), (Epigraphia Indica, Vol-VII, Page-76).
இக் கூற்றை மேலும் உறுதிப்படுத்த சான்றொன்று கிடைத்துள்ளது. விஜயநகர பேரரசர் "இரண்டாம் ஹரிஹர ராயரின்" (கி.பி. 1377 - 1404) புகழ்பெற்ற தளபதியான "தண்ட நாயகா சாளுவ குண்டா" என்பவரைப் பற்றி கர்நாடக மாநிலம், பேலூர் (ஹொய்சளர்களின் தலைநகரம்), சென்னகேசவ பெருமாள் கோயில் (ஹொய்சளர்களின் குல தெய்வம்) கல்வெட்டு ஒன்று கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது (Epigraphia Carnatica, Vol-V, Belur Taluk, Ins No.3, Page-100) :-
"தண்ட பிரதாப பிரபலாதர மகா வன்னி" (Danda Pratapa Prabalatara Maha Vahni) என்பது "மிக பலம்பொருந்திய வெற்றி வீரன் மகா வன்னியன்" என்பதாகும்.
எனவே "தண்ட பிரதாப பிரபலாதர மகா வன்னி சாளுவ குண்டா" என்ற அரசர் "வன்னிய குல க்ஷத்ரிய சமூதாயத்தைச்" சேர்ந்தவர் ஆவார்கள் என்பது உண்மையாகிறது.
இந்த பண்டைய வேளிர் குல மன்னர்கள் காலத்தின் கோலத்தினால் பல கிளைகளாக பிரிந்து பல்வேறு மொழிகள் பேசுபவர்களாக விளங்கியிருந்தாலும், அவர்களது சில பெயர்கள் அவர்களின் பழமையை வெளிப்படுத்திவிடுகிறது.

No comments:

Post a Comment