சோழர்கள் காலத்தில் பல அதிகாரிகளும் மந்திரிகளும் ஆற்றல் மிகுந்தவர்களாக விளங்கினார்கள் என்றால் அது மிகையாகாது. அத்தகையோரில் பல வகுப்பினர்களும் இருந்துள்ளார்கள் என்பது நமக்கு சான்றுகளின் மூலம் தெரியவருகிறது. இவர்களில் மிகவும் சிறப்புற்றவர் "அம்பலவன் பழுவூர் நக்கன்" என்பவர் ஆவார்.
இவர் "விக்கிரம சோழ மகாராயன்", "விக்கிரம சோழ மகாராஜா", "ராஜ ராஜ பல்லவராயன்" போன்ற சிறப்பு பெயர்களைப் பெற்று, உத்தம சோழன் மற்றும் முதலாம் ராஜராஜ சோழன் காலத்தில் மிகச் சிறந்த அதிகாரியாக விளக்கியிருக்கிறார்கள். இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் பகுதியை தனது பூர்வீகமாக கொண்டவர் என்பதை கல்வெட்டு சான்றுகள் குறிப்பிடுகின்றன. இவர் பல தொண்டுகளைப் புரிந்துள்ளார்கள்.
"அம்பலவன் பழுவூர் நக்கன்" அவர்கள், அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோவிந்தப்புத்தூர் கோயிலுக்கு கோபுரத்தை (ஸ்ரீ விமானம்) கருங்கல்லால் கட்டிக்கொடுத்திருக்கிறார் என்பதை விக்கிரம சோழனான உத்தம சோழனின் 14 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகிறது (A.R.E. No.164 of 1928 - 29). மேலும் அக் கல்வெட்டு, அதிகாரி அம்பலவன் பழூவூர் நக்கனை "சூத்திர ஜாதியை" சேர்ந்தவர் என்று தெளிவாக குறிப்பிடுகிறது (Ambalavan-Paluvurnakkan was a Sudra by caste).
சோழர்கள் காலத்தில் சூத்திர ஜாதியைச் சேர்ந்த பலர், அரசியல் அதிகாரிகளாகவும் புலவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்பது உண்மையாகும். புலவர் சேக்கிழார் அவர்களும் பெரியபுராணத்தில் இதைப்பற்றி குறிப்பிடுகிறார்கள்.
மேலும், முதலாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் "சோழ மந்திரியான பூவனூர் மாலிருஞ்சோலை" என்பவர் வாணாதிராயர் என்பவரின் ஆணையை ஏற்றுக்கொண்டு, பெண்ணாடம் வரதராஜ பெருமாள் கோயிலின் முன் மண்டபத்தை கட்டினார் என்பதை கல்வெட்டு ஒன்று (A.R.E. No.271 of 1928 - 29) குறிப்பிடுகிறது. மேலும் இக் கல்வெட்டு "சோழ மந்திரியான பூவனூர் மாலிருஞ்சோலை" என்பவரை "சூத்திரர்களில் முதன்மையானவன்" என்று குறிப்பிடுகிறது (Foremost among the Sudras). அன்பில் செப்பேடு, முதலாம் ராஜ ராஜ சோழனின் தந்தையான சுந்தர சோழனை "க்ஷத்ரியர்களில் முதன்மையானவர்" என்று குறிப்பிடுகிறது (Foremost among the Kshatriyas). எனவே சோழர்கள் காலத்தில் "க்ஷத்ரிய சமூகத்தவர்கள்" மற்றும் "சூத்திர சமூகத்தவர்கள்" போன்றோர்கள் இருந்திருக்கிறார்கள் என்பது உண்மையாகிறது.
இதைப்போலவே, கொங்கு சோழர்கள் காலத்திய கல்வெட்டுகளில் "சூத்திர ராயர்" (சூத்திரர்களின் தலைவன்) என்ற அரசியல் அதிகாரிகளும் மற்றும் அவர்களது உறவுகளையும் பற்றி நமக்கு தெரியவருகிறது. இவர்கள் "பூசகரில் அரசன்" என்றும் "பறையனான சூத்திர ராயன்" என்றும் குறிப்பிடப்படுகிறார்கள் :-
"மன்றாடி பூசகரிலரைசன் பறையனான சூத்திர ராயனான பொய்யாத தமிழன்" (S.I.I. Vol. XXVI, No.241), (1203 - 1204 A.D).
"மன்றாடி பூசகர் அச்சன் பறையனான சூத்திலராயனான பொய்யாத தமிழன்" (S.I.I. Vol. XXVI, No.243), (1202 - 1203 A.D).
"மன்றாடி பூசகரி லரைசன் பறையனான பொய்யாத் தமிழ் நம்பி" (S.I.I. Vol. XXVI, No.239), (12th - 13th century A.D).
"பறையனான சூத்திரராயன்" (S.I.I. Vol. XXVI, No.240), (12th - 13th century A.D).
"வெள்ளாட்டி பூசகரில் மாநயென்" (S.I.I. Vol. XXVI, No.250), (1275 - 1276 A.D).
"வெள்ளாட்டி பூசகரில் பறையன் ஆளுடைநாச்சியும் என் சிறிய தாயும்" (S.I.I. Vol. XXVI, No.253), (1292 - 1293 A.D).
இவர்கள், கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள சோழமாதேவி என்ற ஊரினில் உள்ள குலசேகரசுவாமி கோயிலுக்கு பல தானங்களையும் மற்றும் நற்காரியங்களையும் செய்துள்ளார்கள் என்பதை கல்வெட்டுகள் நமக்கு தெரிவிக்கின்றன.
மேற்குறிப்பிட்ட சான்றுகளின் மூலம் நமக்கு தெரியவரும் கருத்து என்னவென்றால், சோழர்கள் காலத்து சமூதாயமானது பன்முகம் கொண்ட சமூதாயமாக விளங்கியிருக்கிறது என்பதாகும். சோழ பெருவேந்தர்கள் அனைவருக்கும் சமமான அதிகாரத்தை வழங்கியிருக்கிறார்கள் என்பது சான்றுகளின் மூலம் முற்றிலும் உண்மையாகிறது.
"சூத்திர ஜாதியை சேர்ந்த சோழ அதிகாரி அம்பலவன் பழூவூர் நக்கன்",
"சூத்திரர்களில் முதன்மையானவன் என்று போற்றப்பட்ட சோழ மந்திரியான பூவனூர் மாலிருஞ்சோலை",
"கொங்கு சோழர்களின் அரசியல் அதிகாரிகளாக விளங்கிய பறையனான சூத்திர ராயர்கள் (சூத்திரர்களின் தலைவர்கள்)"
போன்றோர்கள் சோழ மன்னர்களிடமும் மற்றும் கொங்கு சோழ மன்னர்களிடமும் "மகாராயன்" என்றும் "மகாராஜா" என்றும் "ராஜ ராஜ பல்லவராயன்" என்றும் "பூசகர் பிரிவினின் அரசன்" என்றும் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெறுகிறார்கள்.
----- xx ----- xx ----- xx -----
No comments:
Post a Comment