Sunday, 16 October 2016

பெண்ணாகடமான முடிகொண்ட சோழச் சதுர்வேதிமங்கலத்துப் பிடாகை கோட்டையில் இருந்து அரசாணை வெளியிட்ட பள்ளிச் சேந்தன் சுத்தமல்லனான வாணகோவரையன்

அரியலூர் மாவட்டம், சென்னிவனம் தீர்க்கபுரிஸ்வரர் கோயிலில் இருக்கும் இரண்டாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு ஒன்று (கி.பி. 1137) "பள்ளிச் சேந்தந் சுத்தமல்லனாந வாணகோவரையந்" என்ற "வாணர் குல குறுநிலமன்னரைப்" பற்றி குறிப்பிடுகிறது. (ஆவணம், இதழ்-20, பக்கம் 65 & 66).





வடகரை விருதராஜபயங்கர வளநாட்டுக் கிழ்க்காரைக்காட்டு சென்னிவலக் கூற்றத்து நெடுவாயில் ஊரவர்களான (ஊரார்கள்) :-
"நெடுவாயிலுடையான் திருவரங்கமுடையான் ஒற்றி கொண்டானும்"
"குலோத்துங்க சோழச் சென்னிநாட்டு வேளானும்"
"நெடுவாயில் உடையான் ராஜேந்திர சோழச் சென்னி நாட்டு வேளானும்"
"சோழன் தேவனான எதிரிலிசோழச் சென்னி நாட்டு வேளானும்"
"நெடுவாயிலுடையான் திருவரங்கமுடையானும்"
இந்த ஊரார்கள் அனைவரும் கோயிலுக்கு நிலதானம் வழங்குவதற்கான அரசாணையை "பள்ளிச் சேந்தன் சுத்தமல்லனான வாணகோவரையன்" அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். மேற்குறிப்பிட்ட கல்வெட்டு (கி.பி. 1137), "வாணர் குல அரசரை" கிழ்கண்டவாறு குறிப்பிடுகிறது :-
"வடகரை விருதராஜபயங்கர வளநாட்டு மேற்கானாட்டு பெண்ணாகடமான முடிகொண்ட சோழச் சதுர்வேதிமங்கலத்துப் பிடாகை கோட்டையில் இருந்து திருமுந் கைப்படி திருமுக காணி பெற்ற பள்ளிச் சேந்தந் சுத்தமல்லனாந வாணகோவரையந்" (Line - 16 to 21).
வடகரை விருதராஜபயங்கர வளநாட்டு மேற்கானாட்டில் இருக்கும் பெண்ணாகடமான முடிகொண்ட சோழச் சதுர்வேதிமங்கலத்துப் பிடாகை கோட்டையில் இருந்து, வன்னிய அரசனான "பள்ளிச் சேந்தன் சுத்தமல்லனான வாணகோவரையன்" அவர்கள் அரசாணையை வெளியிட்டிருக்கிறார்கள்.
பள்ளிச் சேந்தன் சுத்தமல்லனான வாணகோவரையன் அவர்கள் "திருமுந் கைப்படி திருமுக காணி பெற்ற" என்று கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறார். அதாவது இவர் அரசாணையை வெளியிடுவதற்கான அதிகாரத்தையும் மற்றும் அரச நிலங்களையும் பெற்றவர் என்பதாக கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேலும் இவர், பெண்ணாகடமான முடிகொண்ட சோழச் சதுர்வேதிமங்கலத்துப் பிடாகை "கோட்டையில்" இருந்தவர் என்பதாக கல்வெட்டு குறிப்பிடுகிறது.
பிடாகை என்ற சொல்லானது சிற்றூரைக் குறிப்பிடும் சொல்லாகும். குறிப்பாக பிரமதேய ஊருக்குச் சொந்தமான சிற்றூர்களாகும். எனவே பெண்ணாகடமான முடிகொண்ட சோழச் சதுர்வேதி மங்கலத்துப் பிடாகை "கோட்டை" என்பது ஓர் சிற்றூராகும்.
அவ் ஊரில் வாணர் குல அரசனான "பள்ளி சேந்தன் சுத்தமல்லனான வாணகோவரையன்" அவர்கள் "அரச நிலங்களை" பெற்றிருக்கிறார். மேலும் அவர் அவ் ஊரில் ஒரு "கோட்டையை" அமைத்திருக்க வேண்டும். எனவே தான் அவ் ஊருக்கு "கோட்டை" என்ற பெயர் இருந்திருக்கிறது. அக் "கோட்டையில்" இருந்தே வன்னிய மன்னர் அவர்கள் "அரசாணையை" பிறப்பித்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது. முதலாம் குலோத்துங்க சோழனின் (1070 - 1120) ஆட்சி காலத்தில், வாணர் குல மன்னர்களாக இருந்தவர்கள் :-
"வாணகோவரையன் சுத்தமல்லன் உத்தம சோழனான இலங்கேஸ்வரன்" என்பவரும், அவரது மகன் "சுத்தமல்லன் முடிகொண்டானான விருதராசபயங்கர வாணகோவரையன்" என்பவரும் ஆவார்கள். இதில் கலிங்கத்துப் போரில் பங்குபெற்ற (கி.பி. 1112), "சுத்தமல்லன் முடிகொண்டனான விருதராசபயங்கர வாணகோவரையன்" என்பவரே "பள்ளி சேந்தன் சுத்தமல்லனான வாணகோவரையன்" என்பவராவார்கள்.
ஏனென்றால் அவர் தந்தையான "வாணகோவரையன் சுத்தமல்லன் உத்தம சோழனான இலங்கேஸ்வரன்" என்பவரும் "பள்ளி" (வன்னியன்) என்றே கல்வெட்டில் குறிப்பிடப்பட்டார்கள். அவரது பல்வேறு பெயர்கள் வருமாறு :-
"ஸ்ரீ மதுராந்தக சதுர்வேதிமங்கலத்துப் பள்ளி செங்கேணி சாத்தன் சோழனான சேனாபதிகள் வாணராஜர்" (S.I.I. Vol-V, No.1003, Line-2).
"வீரசோழனான வாணராஜர்" (S.I.I. Vol-V, No.1003, Line-3).
"சுத்தமல்லன் சோழ குல சுந்தரனான கங்கைகொண்டசோழ வாணகோவரையன்"
எனவே, வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்தைச் சேர்ந்த "சுத்தமல்லன் முடிகொண்டனான விருதராசபயங்கர வாணகோவரையன் (என்கிற) பள்ளி சேந்தன் சுத்தமல்லனான வாணகோவரையன்" அவர்களிடமே பெண்ணாகடமான முடிகொண்டசோழ சதுர்வேதிமங்கலத்தின் "நிர்வாகம்" (திருமுந்கைப்படி) மற்றும் "நிலவுடமைகள்" (திருமுககாணி) இருந்துள்ளது.
சதுர்வேதிமங்கலங்கள் என்பது "பிராமணர்களுக்கு வழங்கப்பெற்ற நிலங்களாக இருந்தாலும்", அது ஆட்சியாளர்களாக இருந்தவர்களுக்கும் பங்கு இருந்ததை சென்னிவனம் தீர்க்கபுரிஸ்வரர் கோயில் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது.

No comments:

Post a Comment