தமிழ் நாட்டில் தொன்றுதொட்டு அரசால்பவர்கள் "வேந்தரும் வேளிரும்" ஆவர். சங்க இலக்கியங்களில் பல இடங்களில் இதை பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன (பண்கெழு வேந்தரும் வேளிரும், இருபெரு வேந்தரொடு வேளிர்). வேளிர் என்பவர்கள் தமிழ் நாட்டில் அரசாட்சி செய்த பண்டைய மரபினர் ஆவர். வேளிர் என்பவர்கள் "யாக குண்டத்தில்" தோன்றியவர்கள் அதாவது "அக்னியில்" உதித்தவர்களாவர். பண்டைய வேளிர் குல இருங்கோவேளும், சாளுக்கியரும், வேள் எனப்படும் வேள்வி செய்யும் யாக குண்டத்தில் தோன்றிய முனிவர் வழி வந்தவர்கள் ஆவர். துவாரகையில் இருந்து அரசர்களும் வேளிர்களும் தமிழகம் வந்ததாக நச்சினார்க்கினியர் தொல்காப்பியப் பாயிரயுரையிலும் மற்றும் அகத்திணையியல் 32 ஆம் நூற்பாவுரையிலும் கூறியுள்ளார்கள். புறநானூறு பாடல்கள் (201 & 202) நமக்கு இக் கருத்தை வலியுறுத்துகிறது.
பண்டைய அரசர்களான சேரர்கள் "அக்னி குலத்தவர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளனர் (செந்தழலோன் மரபாகி ஈரேழு உலகும் புகழ் சேரன்). வில்லிபாரதம், திருவிளையாடல் புராணம், பேரூர் புராணம் மற்றும் பிற்காலச் செப்பேடுகள் சேரர்களை "அக்னி குலம்" என்றே குறிப்பிடுகிறது. சேரர்கள் சங்ககால இலக்கியங்களில் தங்களை "மழவர்" என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். கொல்லி மழவர் வல்வில் ஓரி, மழவர் பெருமகன் அதியமான் மற்றும் மலையமான்கள் சேரர்களின் கிளைப்பிரிவினர்கள் ஆவர். தமிழ்நாடு அரசு வெளியிட்ட, பாண்டிய பெருவேந்தர் காலம் என்ற நூலில் "பள்ளிகள் க்ஷத்ரியர்கள் என்றும் சேர குல அரசர் குலசேகர ஆழ்வார் வழிவந்தவர்கள்" என்றும் தெரிவிக்கிறது. சேரர் குலத்தில் அவதரித்த குலசேகரப் பெருமானார் அவர்கள் யதுவம்சத்தில் திருஅவதாரம் செய்த கிருஷ்ண பகவானைக் குழந்தைப் பருவத்தில் தாதிகள் சொல்லும் பாவனைபோல "எந்தன் குலப்பெருஞ்சுடரே" என்றும் "நந்தகோபன் அடைந்த நல்வினை நங்கள்கோன் வசுதேவன் பெற்றிலனே" என்றும் அவர் (குலசேகரர்) அருளிச்செய்த "நாலாயிர திவ்ய பிரபந்தம்" பாசுரத்தில், ஆலைநீள் கரும்பு என்ற பாடலில் குறிப்பிட்டுள்ளார்கள்.
சேர மன்னர் குலசேகர ஆழ்வார், யது குலம் (என்னும்) யாதவ குலத்தில் அவதரித்த கிருஷ்ண பகவானைக் "எங்கள் குலத்தில் பிறந்தவரே" என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது "யது (என்னும்) யாதவ குல கிருஷ்ண பகவானை" குலசேகர ஆழ்வார் அவர்கள் "தங்களது வம்சத்தை சேர்ந்தவர்" என்று தமிழ் வேதமான "நாலாயிர திவ்ய பிரபந்தத்தில்" மிகத் தெளிவாக குறிப்பிடுகிறார்கள். மேலும் மன்னர் பெருமான் குலசேகரர் அவர்கள், "ஆ(பசு) மேய்க்கும் குலத்தில் பிறந்த நந்தகோபர், பகவன் ஸ்ரீ கிருஷ்ணரை வளர்க்கப் பெற்ற புண்ணியத்தை தங்களது யது (யாதவர்) குலத்தில் பிறந்த வாசுதேவர் (கிருஷ்ணனின் தந்தை) பெறவில்லையே" என்று வேதனையுடன் தெரிவிக்கிறார்கள்.
கி.பி. 1283-ஆம் ஆண்டில் கேரளாவுக்கு விஜயம் செய்த சீன யாத்ரீகன் "யாங்-திங்-பி" (Yang Ting-pi), சேரர் குலத்து கொல்லம் அரசர்களை "வன்னி" என்றும் "பன்னாட்டார்" என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். (Foreign Notices of South India, K.A. Nilakanta Sastri, University of Madras, Page - 150 & 153). சேரமான் பெருமாளுக்கு முடிச்சூட்டுதல் விழாவில் அப் பகுதியில் வாழ்ந்த "வேளாண்மை செய்யும் வேளாளர் இன மக்கள்" கலந்து கொண்டதை பற்றி "வெள்ளாளர்களின் கொங்கு ஆவணம்" குறிப்பிடுகிறது. அதில் மன்னர் சேரமான் பெருமானை "அக்னி கோத்திரத்தான்" என்று குறிப்பிடுகிறது. அது:-
"நற்குடி நாற்பத்தெண் ணாயிரங் கோத்திர நாட்டவர்கள்
பொற்கிரீ டந்தனைச் சாற்றவந் தார்புவிக் காவலனாம்
அக்கினி கோத்திரன் புகழ்சேர மான்பெரு மான்றனுக்கு
வைக்கவும் வந்திடும் வேளாளர் வாழ்கொங்கு மண்டலமே.
பொற்கிரீ டந்தனைச் சாற்றவந் தார்புவிக் காவலனாம்
அக்கினி கோத்திரன் புகழ்சேர மான்பெரு மான்றனுக்கு
வைக்கவும் வந்திடும் வேளாளர் வாழ்கொங்கு மண்டலமே.
எனவே "சேரர்கள் வன்னிய குல க்ஷத்ரியர்கள்" என்பது முற்றிலும் உண்மையாகும். அத்தகைய சேரர்களின் கிளை மரபினர்களே "யது குல மலையமான்கள்" ஆவர்.
சங்க இலக்கியங்கள் சேரரை "மலையர்" என்று குறிப்பிடுகிறது. சேரர்களின் கிளை மரபினர்களான "மலையமான்கள்" தங்களை சேதிராயர்கள் என்றும் மிலாட்டுடையார் என்றும் கோவலராயர் என்றும் கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள "திருக்கோயிலூரே" மலையமான்களின் தலைநகராகும். சங்ககாலத்தில் இவ்வூர் "திருக்கோவலூர்" என்று அழைக்கப்பெற்றது. மலையமான்கள் தங்களை "வன்னியர்" என்றும் "பள்ளி" என்றும் சோழர் காலத்துக் கல்வெட்டுகளில் குறித்துள்ளார்கள். திருவண்ணாமலை மாவட்டம், அரூர் மற்றும் செங்கம் கல்வெட்டுகள், "வன்னியநார் ஆன மானாபரணச் செதியராயர்" என்றும் "வன்னியநாயன் செதிராயனென்" என்றும் "பெரிஉடையான் அம்மட்டாழ்வார் வந்னிய மக்கள் நாயன் கரிகாலசொழ ஆடையூர் நாடாழ்வானென்" என்றும் குறிப்பிடுகிறது. மலையமான்களின் தலைநகரான திருக்கோவலூர் கல்வெட்டுகள் அவர்களை "வன்னிய மலையமான்" என்றும் "வன்னிய தேவேந்திர மலையமான்" என்றும் "ராஜ ராஜ சேதிராயன் வன்னியநாயன்" என்றும் "கிள்ளியூர் மலையமான் பெரிய உடையான் இறையூரான் சற்றுக்குடாதான் வன்னிய நாயன்" என்றும் குறிப்பிடுகிறது.
குறிப்பாக "வன்னிய நாயன் சற்றுக்குடாதான்" தன்னை 25-ற்கும் மேற்பட்ட கல்வெட்டில் "வன்னிய நாயன்" என்றே குறிப்பிட்டுள்ளான். இம் மன்னனைப் போலவே சம்புவராயர் மன்னர்களும், நீலகங்கரைய மன்னர்களும் தங்களை "வன்னிய நாயன்" என்றே சோழர் காலத்திய கல்வெட்டுகளில் குறித்துள்ளார்கள். சங்க காலத்தில் குறிப்பிடப்பட்ட "மழவர் பெருமகன்" என்பதும் சோழர்கள் காலத்தில் வழங்கப்பட்ட "வன்னிய நாயன்" என்பதும் ஒரே பொருளை உடையதாகும். அதாவது "வன்னியத் தலைவன்" என்பதாகும். மழவர்கள் வன்னியர்கள் ஆவர். கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் தருமபுரி கல்வெட்டு "வன்னியர்களை மழவர்" என்று குறிப்பிடுகிறது. "மழவூர்" என்ற ஒரு நாடு அக் காலக்கட்டத்தில் தருமபுரியில் இருந்ததை அக் கல்வெட்டு மேலும் குறிப்பிடுகிறது. பிற்கால அதியமான்கள் தங்களை கி.பி.14-ஆம் நூற்றாண்டில் "திரிபுவன மல்ல பூர்வ அதியரையர்கள்" என்று "கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டில்" குறிப்பிடப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஒருவரது மகனை "பள்ளி" என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. அது :-
"திரிபுவன மல்ல புர்வாதிய குமரனானச் சிக்கரசிறுப்
பிள்ளைகளில் சொக்கந் கருவாயன்
பள்ளி இடுபூசலில் குதிரை குத்திபட்டான்"
பிள்ளைகளில் சொக்கந் கருவாயன்
பள்ளி இடுபூசலில் குதிரை குத்திபட்டான்"
(பொருள் : அதியமான் மரபின அரசன் குமரனானசிக்கரனின் கடைசிப் பிள்ளையான 'சொக்கன் கருவாயன் பள்ளி' இடுபூசலில் குதிரைக்குத்தி இறந்துள்ளான்).
மேலும் தருமபுரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், ஆம்பள்ளி என்ற ஊரில் உள்ள கல்வெட்டில் :
"ராஜராஜ அதியமானர் விடுகாதழகிய பெருமாள்
பள்ளிகளில் கங்க காமிண்டன் கட்டிய குட்டையைப்
பள்ளிச் சாந்தமாகக் காக்கன் கிளை விடுகாதழகிய
பெரும்பள்ளியாழ்வார்க்கு "
பள்ளிகளில் கங்க காமிண்டன் கட்டிய குட்டையைப்
பள்ளிச் சாந்தமாகக் காக்கன் கிளை விடுகாதழகிய
பெரும்பள்ளியாழ்வார்க்கு "
என்னுடைய குருநாதர், தொல்லியல் மேதை திரு. நடன. காசிநாதன் ஐயா அவர்கள், மேற்குறிப்பிட்ட கல்வெட்டிற்கு பொருள் தந்துள்ளார்கள். அது, "ராஜ ராஜ அதியமானின் உறவினர்களில் (பள்ளிகளில்) கங்க காமிண்டர்கள் இருந்துள்ளார்கள்" என்று ஐயா அவர்கள் பொருள் தந்துள்ளார்கள். எனவே "மழவர்களான அதியமான்கள் வன்னியர்கள்" ஆவர்.
இன்றைய "அரியலூர், பெரம்பலூர்" மாவட்டங்கள் சங்ககாலத்தில் "மழ நாடென்றே" வழங்கப்பெற்றது. மழ நாடான அரியலூரில் ஆட்சி புரிந்த "மழவராய அரசர்கள்" தங்களை "பள்ளி" என்றும் "வன்னிய குலம்" என்றும் குறிப்பிடுகிறார்கள். அதைப்போலவே "திருவக்கரை மழவராய அரசர்களும்" தங்களை "வன்னியர்" என்றும் "பள்ளி" என்றும் குறிப்பிடுகிறார்கள். மழவர்கள் என்பவர்கள் "சிலை வீரர்கள்" (வில் வீரர்கள்) என்று நச்சினார்கினியர் அவர்கள் கி.பி.12-ஆம் நூற்றாண்டில் குறிப்பிடுகிறார்கள். மழநாட்டில் தொன்றுதொட்டு வாழ்ந்து வரும் குடிகளில் "மழவர் குடியும்" ஒன்றாகும். அத்தகைய குடியோர் "வன்னியர்கள்" ஆவார்கள். இவ் மழவர் குடியில் வந்தவளே சோழர்களின் ராஜமாதாவாக விளங்கிய "செம்பியன் மாதேவி" ஆவாள். பிற்காலச் சோழர்கள் காலத்தில் "வன்னியர்கள்" மழநாட்டின் "வில் வீரர்களாக" சோழர் படையில் பணியாற்றியிருக்கிறார்கள். அவர்கள் "பள்ளிகள்" என்ற பெயராலும் அழைக்கப்பெற்றிருக்கிறார்கள்.
திருக்கோவலூர் வட்டம், ஜம்பை கல்வெட்டு, "பள்ளிச்சேரியடிய நம்பியான கோவலரையப் பேரையன்" என்ற மலையமான் பற்றி தெரிவிக்கிறது. வன்னியர் வாழ்விடத்தை (பள்ளிச்சேரி) குறித்துள்ளமையால் இம் மலையமான் "பள்ளி" என்பது பெறப்படுகிறது. சோழர் காலத்தில் "பிராமணர் வாழ்விடத்தையும் சேரி" என்றே கல்வெட்டில் வழங்கப்பட்டிருக்கிறது. செஞ்சி வட்டம், சிங்கவரம் கல்வெட்டு "பள்ளிக்கட்டுச் செதிராயன்" என்று குறிப்பிடுகிறது. இவன் வன்னிய சமூகத்தவன் என்பதை "ஸ்ரீ மதுராந்தகச்சதுர்வெதி மங்கலத்துப் பிடாகையாந மதுவூற் குடிப்பள்ளி சாமந்தன் மும்மலராயன் மகன் அருமொழிதெவனாந பள்ளிக்கட்டு மும்மலராயன்" என்ற செய்யார் கல்வெட்டின் மூலம் தெரியவருகிறது. இச் செதிராயன் (மலையமான்) "பள்ளி இனக் குழுவை" (பள்ளிக்கட்டு) சேர்ந்தவன் என்பதை மேற்குறிப்பிட்ட கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது. மேலும் "மும்மலராயன்" என்பது "மலையமான்களைப் குறிப்பதாகும். சாமந்தன் என்பது அரசனைக் குறிப்பிடும் பதமாகும். மலையமான் வன்னிய மன்னர்களுக்கும் காடவராய வன்னிய மன்னர்களுக்கும் இருந்த திருமண உறவை திருக்கோவலூர் வட்டம், திருவெண்ணைநல்லூர் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது. கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் "கவிச்சக்ரவர்த்தி கம்பர் எழுதிய சிலைஎழுபது" என்ற நூலில் "மலைய மன்னர்" என்று மலையமான் அரசர்களை வன்னிய சமூகத்தவர்களாக குறிப்பிடுகிறது.
முதலாம் ராஜேந்திர சோழனின் (கி.பி.1016) கீழூர் கல்வெட்டில், மலையமான்களை "பார்க்கவகோத்திரத்து பிராந்தகன் யாதவ பீமனான உத்தமசோழ மிலாடுடையார்" என்று தெரிவிக்கிறது. திருக்கோயிலூர் கல்வெட்டு (கி.பி.1059) மலையமான்களை "பார்க்கவ வம்சத்து மிலாடு உடையார் இரணகேசரி இராமரான நரசிங்கவன்மர்" என்று தெரிவிக்கிறது. மேற்குறிப்பிட்ட சோழர்கள் காலத்துக் கல்வெட்டின் மூலம் மலையமான்கள் தங்களை "யாதவ பீமன்" என்றும் "பார்க்கவ கோத்திரம்" என்றும் "பார்க்கவ வம்சம்" என்றும் மிகத் தெளிவாக குறிப்பிடுகின்றனர்.
கொடும்பாளூர் இருக்குவேளிர்கள் தங்களை மூவர் கோயில் சமஸ்கிரத கல்வெட்டில் "யது வம்சம்" என்றும் "யாதவர்" என்று குறிப்பிடுகின்றனர். அங்கு அவர்களின் கன்னட மொழி கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது. இவர்கள் "சோழர்களுக்கு" மிக நெருங்கிய உறவினர்கள் ஆவார்கள். கொடும்பாளூர் இருக்குவேளிர்கள் தங்களை "இருக்குவேள்" என்றும் "இளங்கோவேள்" என்றும் "இருங்கோளன்" என்றும் குறிப்பிடுகிறார்கள்.
சோழர்கள் காலத்தில் விருத்தாசலம், திட்டக்குடி, பெண்ணாடம், காட்டுமன்னார் கோயில், விளந்தை, உடையார்பாளையம் போன்ற பகுதிகள் "இருங்கோளப்பாடி" என்று கல்வெட்டில் அழைக்கப்பெற்றது. வெள்ளாற்றின் இருபுறங்களிலும் சோழர்கள் காலத்தில் வேளிர்களான "இருங்கோளர்கள்" ஆட்சிபுரிந்தார்கள். சங்ககாலத்தில் "இருங்கோவேள்" என்னும் வேளிர் மன்னன் "பிடவூரை" தனது தலைநகராக கொண்டு ஆண்டு வந்தார்கள். இவ் வேளிர் மன்னனான "இருங்கோவேளை" சோழ மன்னனான கரிகாலச் சோழன் வென்றிருக்கிறான். இவனது தலைநகரான "பிடவூர்" என்பது இன்றைய காட்டுமன்னார் கோயில் தாலுக்காவில் உள்ள "புடையூர்" ஆகும். இது வெள்ளாற்றின் தெற்கு கரையோரத்தில் உள்ளது. முற்காலச் சோழனான கோசெங்கண்ணான் விளந்தையில் ஆட்சிபுரிந்த வேளிரான "விளந்தை வேளை" போரில் வென்றிருக்கிறான். இன்றைய உடையார்பாளையம் தாலுக்காவில் உள்ள விளந்தையானது கி.பி.10 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் காலத்தில் இருங்கோளப்பாடி நாட்டு "விளந்தை கூற்றம்" என்று வழங்கப்பட்டது.
வெள்ளாற்றின் வடக்கு கரையோரத்தில் உள்ள எறும்பூரில் உள்ள முதலாம் பாராந்தகச் சோழன் (கி.பி.935) கல்வெட்டு "இருங்கோளன் குணவன் அபராஜிதன்" என்ற வேளிர் மன்னரை பற்றி குறிப்பிடுகிறது.
காட்டுமன்னார்கோயில் ஸ்ரீமுஷ்ணம் கல்வெட்டு (கி.பி.959), "இருங்கோளர் கோனான நாராயணன் புகளைப்பவர் கண்டன்" என்று குறிப்பிடுகிறது. இவன் சுந்தர சோழன் கல்வெட்டில் (கி.பி.962) "இருங்கோளர் கோனான புகழ்விப்பிரகண்டன் அவனி மல்லன்" என்று குறிப்பிடப்படுகிறார்கள்.
கி.பி. 986 ஆம் ஆண்டு விருத்தாசலம் கல்வெட்டு வேளிர் அரசனான "இருங்கோளன் நாரணன் பிரித்திவிபதியார்" என்பவரை குறிப்பிடுகிறது. இவர் உத்தமச் சோழனின் மாமனார் ஆவார். இவரது (இருங்கோளர்) மகள் "வானவன் மாதேவியார்" உத்தமச் சோழனின் பட்டத்து அரசியாவர்கள்.
கி.பி. 992 ஆம் ஆண்டு விருத்தாசலம் கல்வெட்டு "இருங்கோளன் பிரித்திவிபதி அமனி மல்லன்" என்ற வேளிர் குல மன்னனை பற்றி குறிப்பிடுகிறது. இம் மன்னன் முதலாம் ராஜ ராஜ சோழனின் ஆட்சி காலத்தில் இருந்திருக்கிறான். இந்த வேளிர் அமனி மல்லனின் பட்டத்தரசி, பொத்தப்பிச் சோழன் சத்தியரையர் மகளான "மலையவ்வை தேவியார்" ஆவார்.
அமனி மல்லனுக்குப் பிறகு அவனுடைய புதல்வன் "இருங்கோளர் கோனான அமனி மல்லன் சுந்தர சோழன்" விருத்தாசலம் கல்வெட்டில் (கி.பி.1014) குறிப்பிடப்படுகிறான். இவ் வேளிர் மன்னனின் பட்டத்தரசி "கன்னரன் மாதேவடிகள்". இவ்வரசி மிலாட்டுடையார் மகளாவார்.
ராஜாதிராஜ சோழனின் (கி.பி.1050) விருத்தாசலம் கல்வெட்டு, "விசையைபுரக் கூற்றத்து விசையபுரத்துப் பள்ளி அமனி மல்லன்" என்ற வேளிர் அரசனை பற்றி குறிப்பிடுகிறது.
திட்டக்குடி வட்டம் பெண்ணாடம், விக்கிரம சோழனின் கல்வெட்டு (கி.பி.1130), "பள்ளி கூத்தன் மதுராந்தகனான இருங்கோள ராமன்" என்ற வேளிர் அரசனைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
திட்டக்குடி வட்டம் வசிஷ்டாபுரம் மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு, வன்னியர் சமூகத்தை சேர்ந்த "தேனூர் துண்டராயன் திருச்சிற்றம்பலமுடையார்" என்ற குறுநில மன்னனை பற்றிக் குறிப்பிடுகிறது. இவர் "நாவலூர் இருங்கோளர்" மகளாகிய குலோத்துங்கச் சோழியார் என்பவளை திருமணம் செய்துள்ளார்கள். மூன்றாம் குலோத்துங்க சோழனின், கோயில்பாளையம் கல்வெட்டு, இவரை "துண்டராயன் திருவிராடன் குன்றன்" என்றும் இவருடைய அரசி பெயர் "குலோத்துங்கச் சோழியார்" என்றும் குறிப்பிடுகிறது.
"துண்டநாடு உடையார்கள்" என்ற வன்னிய குறுநில மன்னர்கள் சோழர்கள் காலத்தில் அரியலூர் பகுதியை ஆட்சி செய்திருக்கிறார்கள். இவர்களை பற்றி இருபதுக்கும் மேற்பட்டக் கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றனர். இவர்கள் "வேளிர்கள்" ஆவார்கள். சோழ மன்னன் வீர ராஜேந்திரனின் (கி.பி.1067) கல்வெட்டில், துண்டநாடு உடையார்கள் குறிப்பிடப்படுகிறார்கள். அவர் "பள்ளி கூத்தன் பக்கனான ஜெயம்கொண்ட சோழ துண்ட நாடாழ்வான்". இந்த குறுநில மன்னனைப் போல முதலாம் குலோத்துங்கச் சோழனின் (கி.பி.1099) ஆட்சிக் காலத்தில் "துண்டநாடு உடையார் சோழ குல சுந்தரன் கல்யாணபுரம் கொண்டார்" என்ற துண்டநாடு உடையார் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறார்கள். இவரை அக் கல்வெட்டு "தேனூர் உடையான்" என்று குறிப்பிடுகிறது. இவர் மகா பராக்கிரம சாலியாக இருந்திருப்பார் என்பது இவர் பெயரான "கல்யாணபுரம் கொண்டார்" என்பதில் இருந்து தெரியவருகிறது. கல்யாணபுரம் என்பது "சாளுக்கிய தேசமாகும்". இந்த துண்டநாடு உடையார் நிச்சயமாக "கலிங்கத்து போரில்" பங்கேற்றிருக்கிறார் என்பதும் அவர் சாளுக்கிய தேசத்தை வென்றதின் காரணமாக, முதலாம் குலோத்துங்கச் சோழன் அவருக்கு "கல்யாணபுரம் கொண்டார்" என்ற பட்டத்தினை வழங்கியிருப்பார்கள் என்பதும் கல்வெட்டின் மூலம் அறியமுடிகிறது. இத்தகைய "துண்டநாடு உடையார்கள்" தங்களை கல்வெட்டுகளில் "வாணகோவரையார்" என்றும் அழைக்கிறார்கள். வாணகோவரையர்கள் "பள்ளி" என்றும் "வன்னியன்" என்றும் கல்வெட்டில் அழைக்கப்பெற்றனர். வாணகோவரையார் "க்ஷத்ரியர்கள்" ஆவார்கள். {The Nandi plates of Rastrakuta Govinda III (806 A.D) record the grant by Govinda III, at the request of "Kshatriya Mahabali Banaraja", named Sriparama, of the village of Kandamangala, to Isvaradasa, head of the Sthana (i.e. Matha) in the temple on the Nandi Hills}.
கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் வன்னாடு (வந்நாடு) என்பது இன்றைய அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கியிருக்கிறது. வாலிகண்டபுரம் வாலிஸ்வரர் கோயிலில் வன்னாடுடையார்களைப் பற்றிய பல கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றனர். வன்னாடுடையார்கள் சோழர்களுக்கு உறவினர்களாக விளங்கியுள்ளார்கள். கி.பி. 947 ஆம் ஆண்டைச் சார்ந்த திருவையாறு கல்வெட்டு ஒன்று முதலாம் பராந்தக சோழனின் பட்டத்தரசியாக அரிஞ்சிகை என்பவளை பற்றி குறிப்பிடுகிறது. இவ்வரசி "வன்னாடுடையான் இலாடராயன்" என்பவரது மகளாவர். வன்னாடுடையார்கள் மிலாட்டுடையார்களுடனும் திருமண உறவை கொண்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பிரம்மதேசம் ஊர்த் தெருவில் நடப்பெற்றுள்ள, மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் (கி.பி. 1188) கல்வெட்டை, முனைவர் இல. தியாகராஜன் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். இக் கல்வெட்டு வன்னாடுடையார்களைப் பற்றி தெரிவிக்கிறது :-
"பிரிதிசூரச் சதுர்வேதிமங்கலமான பிரம்மதேசத்தை இராஜ ராஜ வன்னாடுடையார் அவர்கள், "வல்லுவன் புலியனான இருபத்துநால் பேரரையன்" உள்ளிட்ட பள்ளிகளுக்கு (வன்னியர்களுக்கு) காணியாக வழங்கியுள்ளார்கள். பிறகு இவ்வூரை மூன்றாம் ராஜ ராஜ சோழன் காலத்தில் "திருவையாறுடையான் கரிகால சோழனான சனநாத வன்னாடுடையான் வாங்கியுள்ளார். இவர் வாங்கிய பிரம்மதேச ஊரை, பிரம்மதேசமுடையப் பள்ளிகளான (வன்னியர்களான) :-
"நாட்டரையனுக்கும்",
"புலியன் மாதனான மகதை நாட்டு பேரையனுக்கும்",
"புலியன் பெரியானான வன்னாட்டு நாடாழ்வானுக்கும்",
"புலியனான திக்கும் சாத்தன் பெரியானுக்கும்",
"சோமன் புலியனுக்கும்"
இவர்கள் (வன்னியர்கள்) வம்சத்தை சேர்ந்தவர்களுக்கு தவிர பிராமணர் முதல் வெள்ளாளர் உள்ளிட்டார்களுக்கும் பள்ளிக்கும் (கோயிலுக்கும்) விற்பதில்லை என்று கல்வெட்டில் தெரிவித்து கையெப்பம் இட்டுள்ளனர். கையெப்பம் இட்டவர்கள் :-
"மகதை நாட்டு பேரையன் புலியன் பெரியானான வன்னாட்டு நாடாழ்வானும்" (வன்னியர்),
"கரிகால சோழனான சனநாத வன்னாடுடையானும்",
"இராச ராச வன்னாடுடையானும்". ஆவார்கள்.
வன்னியர் குல க்ஷத்ரியர் சமூகத்தை சேர்ந்த உடையார் பாளையம் அரசர்கள், தங்களை "கங்கநூஜா வம்சத்தை சேர்ந்த பார்கவ கோத்திரத்தார்கள் என்றும் நெருப்பு கடவுள் சந்ததியில் உதித்த வன்னிய குலத்தவர்கள்" என்று தங்களது வம்சாவழி பட்டியலில் குறிப்பிட்டுள்ளார்கள். (The "Udaiyar Palayam Chieftains" refer them as "Bargava Gotram in Ganganooja Family that took its origin from Vanniya Kulam (the family of the God of Fire).
இத்தகைய மகா பெருமை பொருந்திய "நெருப்பு கடவுள் சந்ததியர்களின்" ஆதி இருப்பிடம் "துவாரகை" என்னும் நகரமாகும். துவாரகையின் சிலப் பகுதிகள் இன்று கடலுக்குள் மறைந்து விட்டாலும், எஞ்சிய மிகப்பெரிய நிலப்பரப்புக்களே இன்றைய "சிந்து சமவெளி" பகுதியாகும். இத்தகைய "துவாரகையை" பற்றிய குறிப்புகள் நமக்கு சங்க இலக்கியங்களில் கிடைக்கிறது. சங்க காலப் புலவர் கபிலர் பாடிய புறநானூற்றில் (பாடல் 201 & 202) துவாரகையை ஆண்ட வேளிர்கள் வடபால் முனிவன் ஒருவனின் "யாக குண்டத்தில்" பிறந்தவர்கள் என்றும் அவ் வேளிர்களின் 49 வது சந்ததியில் வந்தவன் புலிக்கடிமால் என்னும் ஓர் அரசன் என்றும் அதில் குறிப்பிடுகிறார். தமிழ் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் "விஸ்வபுராணசாரம்" என்னும் இலக்கியத்தையும் மற்றும் சம்புவராய மன்னர்களால் ஆதரிக்கப்பெற்ற இரட்டை புலவர்கள் பாடிய "தெய்வீக உலாவையும்" ஆராய்ந்து புறநானூற்றில் (பாடல் 201) குறிப்பிடப்படும் வடபால் தவமுனிவர் என்பவர் "சம்பு மாமுனிவர்" என்று முடிவு கண்டுள்ளார்கள். விஸ்வபுராணசாரம், "சம்புமா முனிவன் வேள்வி தழல் தருமரபில் வந்தோன்" என்று குறிப்பிடுகிறது.
மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள், புறநானூற்றில் குறிக்கப்பெறும் "புலிக்கடிமாலின்" வழிவந்தவர்கள் "ஹோய்சாளர்கள்" என்றும் திருவண்ணாமலையில் ஹோய்சாளர்கள் வழிவந்த மன்னன் "வீரவல்லாளன்" என்பவன் ஆண்டதை "அருணாச்சலப்புராணம்" என்னும் இலக்கியம் குறிப்பிடுவதாக தன்னுடைய "திரவிடத்தாய்" என்னும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் அப்புத்தகத்தில் அவர் "யாக குண்டத்தில்" தோன்றியவர்கள் "வேளிர்கள்" என்பதையும் குறிப்பிடுகிறார்கள்.
கி.பி. 14 ஆம் நூற்றாண்டின் "அருணாச்சலப்புராணம்", ஹொய்சால மூன்றாம் வீரவல்லாள தேவனை "வன்னி குலத்தினில் வரு மன்னா" என்றும் "அனல் குலத்தோன்" என்றும் மிகத் தெளிவாக குறிப்பிடுகிறது. ஹோய்சளர்களின் லட்சனையான "கண்ட பேரண்டமும்" அம்மன்னனது சிலையும் திருவண்ணாமலை கோயிலில் உள்ளது. மேலும் அக் கோயிலில் ஆண்டுதோறும் அம்மன்னனுக்கும் அவனது "க்ஷத்ரிய சந்ததியர்களுக்கும்" சிறப்புகள் செய்யப்படுகிறது. இத்தகைய புகழ் மிகு ஹொய்சால மன்னர்கள் தங்களை "யது வம்சத்தவர்கள்" என்றும் "யாதவர்கள்" என்றும் குறிப்பிடுகிறார்கள். இத்தகைய "யது வம்சத்தில்" தோன்றிய க்ஷத்ரியர்களான ஹொய்சாளர்களின் உறவினர்கள் தான் "ராஷ்டிரகூடர்களும்", "சாளுக்கியர்களும்", "காலசூரிகளும்' ஆவார்கள்.
கி.பி. 8 ஆம் நூற்றாண்டை சேர்ந்த திவாகரம் நிகண்டு சாளுக்கியர்களைப் பற்றி குறிப்பிடுகிறது. அவர்கள் "கேழல் (பன்றி) கொடியைச் சின்னமாகக் கொண்ட சளுக்கை வேந்தர் வேள்புலம் என்னும் பகுதியை ஆண்டனர்" என்று குறிப்பிடுகிறது. கி.பி.578 ஆம் ஆண்டை சேர்ந்த பாதாமிக் கல்வெட்டு ஒன்றில் சாளுக்கியர்களின் தோற்றம் பற்றி குறிப்பிடுகிறது. கார்த்திகேயன் (முருகன்) என்னும் கடவுளை வழிப்படுபவர்கள் என்றும் மாள்வ்ய கோத்திரத்தைச் சேர்ந்த ஹாரீதி என்பவரின் பிள்ளைகள் என்றும் பன்றிக் கொடியை உடையவர்கள் என்றும் குறிப்பிடுகிறது. கல்வெட்டுகள் அவர்களை "க்ஷத்ரியர்கள்" என்றும் "சந்திர குலத்தில்" தோன்றியவர்கள் என்றும் "யது வம்சத்தவர்கள்" என்றும் "யாதவர்கள்" என்றும் குறிப்பிடுகிறது. சீன யாத்ரிகன் யுவான் சுவாங் மேலை சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியை "க்ஷத்ரியன்" என்று குறிப்பிட்டுள்ளான். சாளுக்கியர்களின் வம்சத்தவரான முதலாம் குலோத்துங்கச் சோழன், குலோத்துங்கச் சோழன் உலாவில் "துவராபதி வேளிர்" (முகில் வண்ணன் பொன்துவரை இந்து மரபில்) என்றும் "அக்னி குலத்தவன்" (தீக்கோன் நிகழ்நிலா அன்று நிருப குல துங்கன்) என்றும் அழைக்கப்பெற்றான்.
ஹொய்சால நாடான "மைசூரில்" இன்று இருக்கும் யதுகுல "மைசூர் உடையார்கள்" ஹொய்சாளர்களின் சமூகத்தவர்களே ஆவார்கள். இவர்கள் தங்களை "யாதவர்கள்" என்று குறிப்பிடுகிறார்கள். இவர்களின் சின்னமும் "கண்ட பேரண்டமாகும்". அது இன்று "கர்நாடக அரசின் சின்னமாகும்". மைசூர் உடையார்கள் தங்களை "ஸ்ரீ கண்டிரவன்" என்றும் குறிப்பிடுகிறார்கள். இப் பெயர் வேளிர் அரசன் "கண்டீரக் கோப்பெருநள்ளியின்" பெயரை நமக்கு நினைவுப் படுத்துகிறது.
விஜயநகர பேரரசர்களும் (சங்கம,சாளுவ,துளுவ) "யது வம்சத்தவர்கள்" என்றும் "யாதவர்கள்" என்றும் "க்ஷத்ரியர்கள்" என்றும் "சந்திர வம்சத்தவர்கள்" என்றும் "தேவகியின் கணவர் வழி வந்தவர்கள்" என்றும் பல கல்வெட்டுகளிலும் செப்புபட்டையங்களிலும் குறிக்கப்பெற்றனர். விஜயநகர பேரரசர்கள் ஹொய்சாளர்களின் உறவினர்கள் ஆவர். திருவண்ணாமலை ஆவூர் கல்வெட்டில் (கி.பி.1379), விஜயநகர அரசன் வீர கம்பண்ண உடையாரை மூன்றாம் ராஜ நாராயண சம்புவராயர் "மைத்துனனார்" என்று குறிப்பிடுகிறார்கள். இக் கல்வெட்டின் மூலம் சம்புவராயர்களும் விஜயநகர அரசர்களும் உறவினர்கள் என்பது தெரியவருகிறது. கி.பி. 1463 ஆம் ஆண்டின் "உஞ்சினி செப்புபட்டயம்" விஜய நகர சாளுவ மன்னன் மல்லிகார்ஜுன தேவ மகாராயரை "சம்பு மாமுனிவன் யாகத்தில் தோன்றியவர்" என்று குறிப்பிடுகிறது. அது :-
"சம்புமா முனியார் யாகத்தில் அவதரித்தானவர்
அய்யன் சூரர் (திரு) புவனம் தெக்ஷனாதிபதிக்கு
விசையர் மகா வீரப்பிறதாபர் வன்னிய வேட கண்டர்
அக்கினிப் புரவி யுள்ளவர் மகா பிறாக்கிறம சாலியறானவர்"
(Avanam - 19, Jul-2008, Page-104), (Mallikarjuna Maharayar, 1463 A.D).
அய்யன் சூரர் (திரு) புவனம் தெக்ஷனாதிபதிக்கு
விசையர் மகா வீரப்பிறதாபர் வன்னிய வேட கண்டர்
அக்கினிப் புரவி யுள்ளவர் மகா பிறாக்கிறம சாலியறானவர்"
(Avanam - 19, Jul-2008, Page-104), (Mallikarjuna Maharayar, 1463 A.D).
பாண்டிச்சேரி வில்லியனூர் செப்புபட்டயம், மல்லிகார்ஜுன தேவ மகாராயரை "ராஜ வன்னியன்" என்று குறிப்பிடுகிறது. அது :-
"கண்டன்மார் தந்திரிமார் படையாக்ஷியார் என்னும் பல பட்டம் பெற்ற சோம சூர்ய அக்கினி வம்ச பன்னாடரான உறவின் முறையார் அனைவரும் போய் இராஜ வன்னிய இராஜஸ்ரீ மல்லிகார்ச்சுன தேவ மகா இராயரைக் கண்டு பேச அப்போது இராயரும் சிம்மாசனம் விட்டு இறங்கி நமது வம்சத்தாரென்று தெரிந்து தேவாலய பூஜையிருக்க மடத்து தருமம் நமக்கேனென்று இராயரும் கேட்க" என்று தெரிவிக்கிறது .
அதாவது, இராஜ வன்னிய இராஜஸ்ரீ மல்லிகார்ஜுன தேவ மகாராயர் அவர்கள், பல நாட்டை உடையவர்களான வன்னியர்களை (பன்னாட்டவர்கள்) பார்த்து "க்ஷத்ரியர்களாகிய நமக்கு தேவாலயம் மற்றும் அதில் நடைபெறும் சிறப்பு பூஜைகள் இருக்கும்பொழுது நான்காம் வருணத்தார்களின் (சூத்திரர்கள்) மடத்து தருமம் நமக்கு ஏன்" என்று கேட்டிருக்கிறார்கள். இதன் மூலம் வன்னியர்கள் "க்ஷத்ரியர்கள்" என்பது தெரியவருகிறது.
இத்தகைய புகழ் மிகு "நெருப்பு கடவுள் சந்ததியில் உதித்த வன்னிய குலத்தவர்கள்" தங்களது பண்டைய தொடர்பை இன்றும் விடாமல் தமிழகத்திலும், இலங்கையிலும், கர்நாடகத்திலும் மற்றும் ஆந்திரத்திலும் "திரௌபதி வழிபாடு" மூலம் காத்துவருகிறார்கள். மேலும் பண்டைய கலையான "பாரத கூத்து கலையையும்", "அர்ஜுனன் தபசுவையும்", "அரவான் களப்பலியையும்" இன்றும் அவர்கள் தொடர்வது வரலாற்றின் சிறப்பம்சமாகும். இத்தகைய நிகழ்வுகள் அவர்களின் பண்டையக் கலாச்சாரத்தை பறைச்சாற்றுவதாக உள்ளது. வாழ்க பண்டைய அரசக் குடிகள்.
----- xx ----- xx ----- xx ----- xx -----
நன்றி : நா. முரளி நாயக்கர்
குறிப்பு:இக் கட்டுரை வரலாற்று ஆதாரத்தை கொண்டதாகும்.
மலையமான் வன்னியர் இல்லை மலையமான் நத்தமான் சுருதிமான் இவர்கள் பார்க்கவகுலம் என்று அழைக்கபடுவர் திருக்கோவிலூரில் இருக்கின்றனர் மலையமான் நத்தமான் உடையார் பட்டம் கொண்டவர்கள் சுருதிமான் மூப்பனார் பட்டம் கொண்டவர்கள் கல்வெட்டுகள் பார்க்கவகோத்திர மிலாடுடையார்கள் என்றும் மலையமான் திருமுடிகாரி, மேர்கன்டவர்கள் மூன்று பிரிவினர் குல முதல்வன் மன்னர் தெய்வீகன் யதுகுல தலைவர் நத்தமக்கள் என்றும் கல்வெட்டு உள்ளது
ReplyDelete