சங்கத் தமிழ் புலவரான கபிலர் அவர்கள் புறநானூறுப் பாடலில் (201), "வடபால் முனிவரது யாக குண்டத்தில் தோன்றிய வேளிர் மன்னர்களைப்" பற்றி மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள். வேளிர் வரலாறு எழுதிய திரு. மு. இராகவயங்கார் ஐயா அவர்கள், "வடபால்முனிவன் தடவு" என்பதற்குப் பழைய புறநானூற்றுரைக்காரர் "வடநாட்டு முனிவரது ஓமகுண்டம்" என்று பொருள் குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார்கள்.
ஆனால் சென்ற 20 ஆம் நூற்றாண்டில் புறம் - 201 வது பாடலுக்கு உரை எழுதிய உரைவேந்தர் திரு. ஒளவை துரைசாமிப் பிள்ளை ஐயா அவர்கள், "தடவு" என்பதற்கு பொருத்தமே இல்லாத பொருளை வேண்டுமென்றே வலிந்து சொன்னார்கள். அதாவது "தடவு" என்பது "நான்கு மலைகளுக்கு நடுவே உள்ள நிலப்பரப்பாம்". அதில் தான் வேளிர்கள் தோன்றினார்களாம். "தடவு" என்பது "ஓமகுண்டம்" என்ற பொருளில் அமையாதாம்.
அக்னிவம்சத்தில் தோன்றிய சேர மன்னர் மரபினரான இளங்கோவடிகள் அவர்கள் எழுதிய சிலப்பதிகாரத்தில், "நீணிலங் கடந்த நெடுமுடி யண்ணல்தாடொழு தகையோன்"(சிலப் - 11.148). என்று குறிப்பிடுகிறார்கள். மேலும் அவர் "தடவுத்தீ யவியாத் தண்பெரு வாழ்க்கை", "மடவரல் மகளிர் தடவுநெருப் பமர்ந்து" என்று தெளிவாக குறிப்பிடுவதால், "தடவு" என்பது "ஓமகுண்டத்தையே" (யாககுண்டம்) குறிக்கும் சொல்லாகும் என்பது முற்றிலும் உறுதியாகிறது.
மேற்குறிப்பிட்ட "தடவு" பற்றிய சான்றுகள் தெளிவாக குறிப்பிடுவதை கருத்தில் கொள்ளாமல், பொருந்தாத விளக்கத்தை வேண்டுமென்றே கொடுத்ததன் நோக்கம் என்பது என்னவாக இருக்கும் என்றால், வன்னியர்களின் வரலாற்றுக்கு ஒருபோதும் பெருமை சேரக்கூடாது என்பதே ஆகும்.
இனி இந்த "வடபால் முனிவர்" யார் என்பதை பார்ப்போம். தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள், வடபால் முனிவர் என்பவர் "சம்பு மாமுனிவரே" என்பதை சான்றுகளை மேற்கோள் காட்டி குறிப்பிட்டிருக்கிறார்கள். திருமூலரின் திருமந்திரம் "வடபால் முனிவர்" என்பவரை "அகத்திய முனிவர்" என்று குறிப்பிடுகிறது.
எனவே "வடபால் முனிவர்" என்பவர் "சம்பு மாமுனிவரான அகத்தியர்" ஆவார் என்பது உண்மையாகிறது. இக் கருத்துக்கு வலிமைசேர்க்கும் விதமாக சான்றொன்று கிடைத்துள்ளது. அகத்திய முனிவரின் ஆய்வு மையமான ஸ்ரீ முத்து கிருஷ்ணசாமி மிஷன் (Sri Muthukrishna swamy mission), அகத்திய முனிவரை "உபய சம்பு" என்று குறிப்பிடுகிறது. இந்த மையத்தினர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு "பிச்சாவரம் சோழ அரசர்களை" வாழ்த்தி சென்னை கிருஷ்ணகான சபாவில் கௌரவம் செய்தார்கள் என்பது குறிப்பிடதக்கது. அவ் விழாவில் தொல்லியல் அறிஞர் திரு. நடன. காசிநாதன் ஐயா அவர்களும், நானும், அருமை நண்பர் திரு. அண்ணல் கண்டர் அவர்களும் கலந்துகொண்டோம்.
எனவே புறநானூறுப் பாடல் - 201 குறிப்பிடும் "வடபால் முனிவரது ஓமகுண்டத்தில் தோன்றிய வேளிர்கள்" என்பது "அகத்திய முனிவரின் ஓமகுண்டத்தில் தோன்றிய வேளிர்கள்" என்பதாகும். இக் கருத்துக்கு வலிமைச் சேர்க்கும் விதமாக மராட்டிய மாநில சமஸ்கிருத கல்வெட்டு ஒன்று நமக்கு சான்றளிக்கின்றது. கி.பி. 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அக் கல்வெட்டு "அக்னி குலத்து வன்னிய வம்சத்தார்கள் அகத்திய முனிவரின் ஓமகுண்டத்தில் இருந்து பிறந்தார்கள்" என்பதை மிகத் தெளிவாக குறிப்பிடுகிறது. அக் கல்வெட்டில் குறிப்பிடப்படும் "வன்னிய அரசர்கள்" என்பவர்கள் "சாளுக்கிய வம்சத்தை" சேர்ந்தவர்கள் ஆவார்கள். சோழர் காலக் கல்வெட்டு சாளுக்கியர்களை "வேள் குலத்தவர்கள்" (வேளிர்கள்) என்று குறிப்பிடுகிறது.
மேலும் அந்த மராட்டிய மாநில கல்வெட்டு, அகத்திய முனிவரை வடநாட்டில் வாழ்ந்த முனிவர் என்று குறிப்பிடுகிறது. எனவே தான் புலவர் கபிலர் அவர்களும், புறம் - 201 வது பாடலில் "வடபால் முனிவன்" (அகத்திய முனிவர்) என்று குறிப்பிட்டிருக்கிறார்கள் போலும். புறநானூற்றுப் பாடல் - 201 க்கு உரை எழுதிய புலவரும் "வடநாட்டு முனிவரது ஓமகுண்டம்" என்றே பொருள் குறிப்பிட்டதாக திரு. மு. இராகவயங்கார் ஐயா அவர்கள் தெரிவித்தது என்பது "அகத்திய முனிவர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்" என்பதை உறுதிப்படுத்துகிறது.
அக்னி குண்டத்தில் இருந்து வன்னிய அரசர்களை தோற்றுவித்த "உபய சம்பு முனிவரான அகத்திய முனிவரே", வன்னியர்களை தென் இந்தியாவிற்கு கொண்டு வந்தார்கள் என்பதை தொல்காப்பிய சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.
கி.பி. 12 - 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உரையாசிரியரான புலவர் நச்சினார்க்கினியர் அவர்கள், தொல்காப்பியப் பாயிரவுரையிலும் மற்றும் தொல்காப்பிய அகத்திணையியல் 32 ஆம் நூற்பாவுரையிலும் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறார்கள் :-
"அகத்தியனார் துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண்குடி வேளிருள்ளிட்டாரையும் அருவாளரையுங் கொண்டு போந்து காடு கெடுத்து நாடாக்கி" என்றும் "மலையமாதவன் நிலங்கடந்த நெடுமுடியண்ணலுழை நரபதியருடன் கொணர்ந்த பதினெண்வகைக் குடிப்பிறந்த வேளிர்க்கும் வேந்தன் தொழில் உரித்தென்கின்றது"
மேற்குறிப்பிட்ட தொல்காப்பிய குறிப்பில் இருந்து நமக்கு தெரியவரும் செய்தி என்னவென்றால், அகத்திய முனிவர் அவர்கள் துவராபதி சென்று நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழியினராகிய அரசரையும் வேளிரையும் தென்னாட்டிற் குடியேற்றினார்கள் என்பதாகும்.
எனவே வேந்தர்களும் வேளிர்களும் திருமாலாகிய கண்ணனின் மரபினர்கள் என்பது முற்றிலும் உண்மையாகிறது. இவர்களே பண்டைய தமிழ் நாட்டில் குடியேறி காடுகளை அழித்து நாடுகளை உண்டாக்கி, கலை மொழி இலக்கியங்களை வளர்த்தெடுத்திருக்கிறார்கள்.
வாழ்க "உபய சம்பு முனிவரான அகத்திய முனிவரது" ஓமகுண்டத்தில் தோன்றிய வன்னிய குல க்ஷத்ரியர்கள்.
------ xx ----- xx ----- xx -----
வேளிர்களின் ஆதி இருப்பிடமான துவாரகை என்பது "சிந்து சமவெளி நாகரிகத்தின்" ஒரு பகுதியாகும். அண்மையில் கும்பகோணம் அருகில் உள்ள செம்பியன் கண்டியூரில் கிடைக்கப்பெற்ற "கற்கோடரியில்" எழுதப்பெற்ற "சிந்து சமவெளி குறியீடு எழுத்தை", அறிஞர் திரு. மகாதேவன் ஐயா அவர்கள் "முருகன்" என்று சொல்லியுள்ளார்கள். இது ஒன்றே சான்றாகும் "சிந்து சமவெளி எழுத்துக்களை" (தமிழ் மொழியை) வேந்தர்களும் வேளிர்களும் தமிழகத்திற்கு கொண்டு வந்தார்கள் என்று.
மேலும் "பண்டையத் தமிழ் பிராமி" எழுத்துக்களில் "சிந்து சமவெளி குறியீடு எழுத்துக்கள்" பல குறிப்பிடப்பட்டுள்ளது. இவையெல்லாம் மிக முக்கியமான சான்றாகும். அதாவது வேந்தர்களும் வேளிர்களும் "சிந்து சமவெளி பகுதியில்" இருந்து தமிழ் மொழியை கொண்டு வந்தார்கள் என்று.
------ xx ----- xx ----- xx -----
No comments:
Post a Comment