ஓய்மா நாடான திண்டிவனம், ஓயிந்தியாபட்டு அஸ்வத்தேஸ்வரர் கோயிலில் இருக்கும் இரண்டாம் குலோத்துங்கச் சோழனின் கல்வெட்டு (கி.பி.1137) ஒன்று, வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்தைச் சேர்ந்த பேரரையர்கள் (மாவீரர்கள்) கொடுத்த நந்தா விளக்கு கொடையைப் பற்றி குறிப்பிடுகிறது (S.I.I Vol-VII, No.832) :-
" உள்சூட்டு குடிப்பள்ளி சாத்தந் செயாந்ஆந சொழப் பெரியரையந்" (குடிப்பள்ளி சாத்தன் செயான் ஆன சோழப் பெரியரையன்)
"ராஜராஜவளநாட்டுத் திரிபுவநமா தெவிச் சதுர்வெதி மங்கலத்துக் கீழ் பிடாகை மண்ணுண்ணிபாக்கத்துக் குடிபள்ளி செயங்கொண்டாந் குந்றநான திருவெண்காட்டுப் பெரியரையந்" (குடிபள்ளி ஜெயம்கொண்டான் குன்றனான திருவெண்காட்டுப் பெரியரையன்)
மேலும் இதே கல்வெட்டில் வரிகள்-3 இல் :-
"ஸ்ரீ விக்கிரமசொழதெவற்கு யாண்டு எழாவது முநூற்றுக்குடிப்பள்ளி செங்கெணியம்மையப்பந் செந்தாந் செதராயந்"
என்று குறிப்பிடுகிறது. சோழப் பெருவேந்தன் விக்கிரம சோழ தேவரின் காலத்தில் (கி.பி.1124), "முந்நூற்றுக் குடிப்பள்ளி செங்கேணி அம்மையப்பன் சேந்தன் சேதிராயன்" கொடுத்த கொடையைப்பற்றி கல்வெட்டு தெரிவிக்கிறது.
"குடிப்பள்ளி செங்கேணி சேதிராயன்" என்பது மலையமான் அரசர்களைப் பற்றி தெரிவிப்பதாகும். குடிப்பள்ளி செங்கேணி என்று கல்வெட்டில் பயின்று வருவதால் இவர் "வன்னிய சமூகத்தைச்" சேர்ந்தவர் என்பது தெளிவாகிறது.
"முந்நூற்றுக் குடிப்பள்ளி செங்கேணி அம்மையப்பன் சேந்தன் சேதிராயன்" என்பவர் விக்கிரம சோழன் காலத்திலும் இரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலத்திலும் இருந்திருக்கிறார். எனவே இவர் அநேகமாக "விக்கிரம சோழ சேதிராயனாக" இருக்க வேண்டும்.
இதைப்போலவே, மதுராந்தகம் வட்டம் அச்சரப்பாக்கத்தில் இருக்கும் வீரபாண்டியரின் கல்வெட்டு (S.I.I Vol-VII, No.457) ஒன்று "சம்புவராய மலையமான்" என்று குறிப்பிடுகிறது.
வன்னிய சமூகத்தைச் சார்ந்த மலையமான்கள் தங்களை "வன்னியர்" என்றும் "பள்ளி" என்றும் கல்வெட்டுகளில் குறித்துள்ளார்கள். திருவண்ணாமலை மாவட்டம், அரூர் மற்றும் செங்கம் கல்வெட்டுகள் :-
"வன்னியநார் ஆன மானாபரணச் செதியராயர்" என்றும்
"வன்னியநாயன் செதிராயனென்" என்றும்
"பெரிஉடையான் அம்மட்டாழ்வார் வந்னிய மக்கள் நாயன் கரிகாலசொழ ஆடையூர் நாடாழ்வானென்"
என்றும் குறிப்பிடுகின்றன. மலையமான்களின் தலைநகரான திருக்கோவலூர் கல்வெட்டுகள் :-
"வன்னிய மலையமான்" என்றும்
"வன்னிய தேவேந்திர மலையமான்" என்றும்
"ராஜ ராஜ சேதிராயன் வன்னியநாயன்" என்றும்
"கிள்ளியூர் மலையமான் பெரிய உடையான் இறையூரான் சற்றுக்குடாதான் வன்னிய நாயன்"
என்றும் குறிப்பிடுகின்றன. குறிப்பாக "வன்னிய நாயன் சற்றுக்குடாதான்" தன்னை 25-ற்கும் மேற்பட்ட கல்வெட்டுகளில் "வன்னிய நாயன்" என்றே குறிப்பிட்டுள்ளான். இம் மன்னனைப் போலவே சம்புவராயர் மன்னர்களும், நீலகங்கரைய மன்னர்களும் தங்களை "வன்னிய நாயன்" என்றே சோழர்கள் காலத்திய கல்வெட்டுகளில் குறித்துள்ளார்கள். சங்க காலத்தில் வழங்கப்பெற்ற "மழவர் பெருமகன்" என்பதும் சோழர்கள் காலத்தில் வழங்கப்பெற்ற "வன்னிய நாயன்" என்பதும் ஒரே பொருளை உடையதாகும். அதாவது "வன்னியத் தலைவன்" என்பதாகும். மழவர்கள் வன்னியர்கள் ஆவார்கள்.
செஞ்சி வட்டம், சிங்கவரம் கல்வெட்டு "பள்ளிக்கட்டுச் செதிராயன்" என்று குறிப்பிடுகிறது. இவர் வன்னிய சமூகத்தவர் என்பதை :-
"ஸ்ரீ மதுராந்தகச்சதுர்வெதி மங்கலத்துப் பிடாகையாந மதுவூற் குடிப்பள்ளி சாமந்தன் மும்மலராயன் மகன் அருமொழிதெவனாந பள்ளிக்கட்டு மும்மலராயன்"
என்ற செய்யார் கல்வெட்டின் மூலம் தெரியவருகிறது. இச் செதிராயன் (மலையமான்) "பள்ளி இனக் குழுவை" (பள்ளிக்கட்டு) சேர்ந்தவன் என்பதை மேற்குறிப்பிட்ட கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகின்றன. மேலும் "மும்மலராயன்" என்பது மலையமான்களைப் குறிப்பதாகும். "சாமந்தன்" என்பது அரசனைக் குறிப்பிடும் பதமாகும்.
No comments:
Post a Comment