Sunday, 16 October 2016

வன்னிய குல க்ஷத்ரியர்களின் வில் விழா

 விஜயதசமி நாளன்று (புரட்டாசி திருவோணம்) மழவர்களாகிய வன்னியர்கள் "வில் விழா" கொண்டாடுவது மரபாகும். சங்க காலத்தில் இவ் வில் விழாவானது "பூந்தொடை விழா" (தொடை = அம்பு) என்று வெகு விமர்சையாக மழவர்களால் கொண்டாடப்பட்டதை சங்க இலக்கியங்களான 'அகநாநூறு' மற்றும் 'மதுரைக் காஞ்சி' குறிப்பிடுகிறது.
மழவர்கள் என்பவர்கள் "க்ஷத்ரிய வம்சத்தவர்கள்" என்பதை சோழர்கள் காலத்து திருச்செங்கோடு செப்புபட்டையம் குறிப்பிடுகிறது. அச் செப்புபட்டையம் கொல்லி மழவர்களை "வர்மன்" (க்ஷத்ரியன்) என்று குறிப்பிடுகிறது.
பூந்தொடை விழாவானது சங்க மருவிய காலத்தில் "வில்லார் விழா" என்று வழங்கப்பட்டதை "திணைமாலை நூற்றம்பது" என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சோழர்கள் காலத்தில் இவ் விழாவானது "வில் விழா" என்று வழங்கப்பட்டதையும், அதை "விஜயதசமி" நாட்களில் வன்னியர்கள் கொண்டாடியதையும் "கவிச் சக்கரவர்த்தி கம்பர்" அவர்கள் "சிலை எழுபது" என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள் :-
"வன்மங்க லம்பொருத்தி
வளர்வனிய குலவரசர்
வின்மங்க லம்பொருந்தும்
விறற்றசமி நாட்கொளினே" (சிலைஎழுபது-1)
இரண்டாம் ராஜ ராஜ சோழன் காலத்தில் (கி.பி. 1152) இவ் விழாவினை கொண்டாடுவதற்காக, வன்னிய மன்னன் "கூடலூர் ஆளப்பிறந்தான் மோகனனான நாலுதிக்கும் வென்ற ராஜராஜக் காடவராயன்" அவர்கள் கொடை வழங்கியுள்ளதை விழுப்புரம் மாவட்டம் எலவானாசூர்க் கோட்டை கல்வெட்டு குறிப்பிடுகிறது.






இறையானறையூர் ஊர் பாகங் கொண்டருளிய மகாதேவர்க்குப் புரட்டாசித் திருவோணத் திருநாள் எழுந்தருளுவதற்காகக் கூடலூர் ஆளப்பிறந்தான் மோகனான நாலுதிக்கும் வென்ற ராஜ ராஜக் காடவராயன் இந்நாயனார் தேவதானம் பருந்தலான மலையவிச்சாதிர நல்லூர் உட்படப் பிற தேவதான ஊர்களிலிருந்து தான் பெற்றுவருகிற பெரும்பாடி காவல், சிறுபாடி காவல், தறியிறை, தட்டாரப் பாட்டம், அந்தராயம், தர விநியோகங்களையும் எப்பேர்ப்பட்ட ஏல்வை தேவைகளையும் பயன்படுத்திக் கொள்வதற்காகத் தானமாக வழங்குகிறான். இத்தர்மம் அழிவு செய்தார் வல்லவரையன் ஸத்யம் தங்களம்மைக்குத் தாமே மணாளன் எனக் கல்வெட்டு முடிவடைகிறது. இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் கூடலூர் ஆளப்பிறந்தான் மோகனான நாலு திக்கும் வென்ற ராஜராஜக் காடவராயன், காடவராயன் கோப்பெருஞ்சிங்கனின் முப்பாட்டன் ஆவான்.
விஜயதசமித் திருநாளாகிய புரட்டாசித் திருவோண நாளில் சிவபெருமான் (திருவிழா) எழுந்தருள்வது என்பது நோன்பு முடிந்த பின்னர் நடைப்பெறும் "அம்பு போடும்" நிகழ்வே ஆகும். இந்நிகழ்வின் போது சிவபெருமானின் சோமாஸ்கந்த மூர்த்தம் எழுந்தருள்விக்கப்பட்டு அம்பு போடுதல் நடைபெறுவது வழக்கம்.
கி.பி. 18 ஆம் நூற்றாண்டில், புதுச்சேரியில் இவ் விழாவை சிறப்பாக நடத்துவதற்காக, இடங்கை சிம்மாசனத்துக்குக் கர்த்தரான நாகு வன்னிய நாட்டார் அவர்கள் கொடை வழங்கியுள்ளார்கள். மேலும் இவ் விழாவினை தலைமை வகித்தும் நடத்தியுள்ளார்கள்.
இத்தகைய சிறப்பு பொருந்திய வில் விழாவானது இன்று "அம்பு குத்தி விழாவாக" வன்னியர்களால் நடத்தப் பெற்று வருகிறது. இவ் விழாவை மழவர்களாகிய வன்னிய குல க்ஷத்ரியர்கள், தங்களது இல்லங்களில் சிறப்பு பொருந்திய விழாவாக "வில் வைத்து" கொண்டாட வேண்டும். க்ஷத்ரியர்களாகிய வன்னியர்களின் தனிச் சிறப்பானதொரு விழாவாக வரும்காலங்களில் இவ் "வில் விழாவை" கொண்டாடவேண்டும். அப்போது தான் நமக்கென்று தனி அடையாளம் பிறக்கும்.
க்ஷத்ரியர்களின் "வில் விழாவை" விஜயதசமி நாளில் சிறப்பாக கொண்டாடுவோம். க்ஷத்ரிய தர்மத்தை போற்றி காப்போம்.

No comments:

Post a Comment