Sunday, 16 October 2016

வாணகப்பாடியான மதுராந்தக வளநாடும் பள்ளி குல சேனாபதிகளான வாணராஜர்களும்

கர்நாடக மாநிலத்திலுள்ள நந்தி மலையை பூர்வீகமாக கொண்ட "வாணாதிராயர்கள்", தங்களை கி.பி. 8 ஆம் நூற்றாண்டின் செப்புப்பட்டயத்தில் "க்ஷத்ரியர்கள்" என்று குறிப்பிட்டார்கள்.
நந்தி மலையை தொடர்ந்து வாணர்கள் தங்களது தலைநகரை வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டைக்கு அருகில் உள்ள "திருவல்லம்" என்னும் நகரத்திற்கு மாற்றினார்கள். அதன் பிறகு பழைய தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்த "பொன்பரப்பி ஆறகளூருக்கு" மாற்றினார்கள் என்று பல வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.
பொன்பரப்பி ஆறகளூருக்கு முன்னர் வாணர்களது தலைநகரம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுராந்தகத்தில் இருந்திருக்கிறது என்பதை சில வரலாற்று அறிஞர்கள் கல்வெட்டு சான்றுகளுடன் குறிப்பிட்டுள்ளார்கள்.
முதலாம் ராஜேந்திர சோழனின், ஜம்பை (விழுப்புரம் மாவட்டம்) கல்வெட்டு ஒன்று "ஜெயம்கொண்ட சோழமண்டலத்து வாணகப்பாடியான மதுராந்தகவளநாடு" (A.R.E. No.82 of 1906) என்று குறிப்பிடுகிறது. இதை முனைவர் எம். எஸ். கோவிந்தசாமி ஐயா" அவர்கள் "The role of feudatories in later chola history" என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்த சான்றின் மூலம் நமக்கு தெரியவரும் உண்மை என்னவென்றால், "திருவல்லத்தில்" இருந்த வாணாதிராயர்கள், தங்களது தலைநகரை "மதுராந்தகத்திற்கு" மாற்றியிருக்கிறார்கள் என்பதாகும்











.
தமிழக குறுநிலமன்னர்கள் வரலாற்றை எழுதிய முனைவர் எம். எஸ். கோவிந்தசாமி ஐயா" அவர்கள் வாணாதிராயர்களைப் பற்றி கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்கள் :-
முதலாம் ராஜ ராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் "மறவன் நரசிம்ம வர்மன் ஆன ராஜ ராஜ வாணகோவரையர்" என்ற வாணர் குல அரசர் குறுநில மன்னராக இருந்திருக்கிறார். இவருடைய "மறவன்" என்ற பட்டமானது, இவர் சிறந்த போர் வீரராக விளக்கியிருக்கிறார் என்பதை குறிப்பிடுகிறது.
முதலாம் ராஜேந்திர சோழனின் (கி.பி.1012 - 1044) ஆட்சிக்காலத்தில் "சேனாபதி வாணராஜர்" என்ற "செம்பியன் மாவலிவாணராயர்" என்பவர் இருந்திருக்கிறார். இவர் அனேகமாக முதலாம் ராஜாதிராஜ சோழனின் (கி.பி.1018 - 1054) ஆட்சிக்காலத்தில் இருந்த "ராஜேந்திர சோழ மாவலிவாணாதிராயராக" அறியப்படுகிறார். மேலும் இவர் "மறவன் நரசிம்ம வர்மன் ஆன ராஜ ராஜ வாணகோவரையனின்" மகன் ஆவார்.
சோழர்களின் தளபதியாக (சேனாபதியாக) இருந்த காரணத்தினால், இவர் பல முக்கிய ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பர். இவர் முதலாம் ராஜேந்திர சோழனுக்கு பக்கபலமாக விளக்கியிருக்கிறார். தனது அரசனான "முதலாம் ராஜேந்திர சோழன்" நலம்பெறவேண்டி பாண்டிச்சேரி திருபுவனை கோயிலுக்கு கொடை கொடுத்துள்ளார் "சேனாபதி வாணராஜர்" அவர்கள் (A.R.E. No. 176 of 1919).
"சேனாபதி வாணராஜர்" அவர்களுடைய ஆட்சிக்காலத்தில், வாணர்களின் பாடிவீடாக விளங்கிய பகுதி என்பது "மதுராந்தக வளநாடாகும்".
"சேனாபதி வாணராஜருக்கு" பிறகு "சேனாபதி அருமொழி விக்கிரம சோழனான ராஜாதிராஜ மகாபலிவாணராயர்" என்பவர் இருந்திருக்கிறார்.
"சேனாபதி அருமொழி விக்கிரம சோழனான ராஜாதிராஜ மகாபலிவாணராயருக்கு" பிறகு முதலாம் குலோத்துங்கச் சோழனின் ஆட்சி காலத்தில் "வாணகோவரையன் சுத்தமல்லன் உத்தமசோழனான இலங்கேஸ்வரன்" என்பவர் இருந்துள்ளார். இவர் "சுத்தமல்லன் சோழகுல சுந்தரனான கங்கைகொண்ட சோழ வாணகோவரையர்" என்று அழைக்கப்பட்டுள்ளார். ஸ்ரீரங்கம் கல்வெட்டு இவரை "வாணாதி ராஜா" என்று குறிப்பிடுகிறது.
இந்த "வாணாதிராஜா" தான், "பள்ளி செங்கேணி சாத்தன் சோழனான சேனாபதி வாணராஜர்" என்று சில காரணங்களால் தெரியவில்லை என்று குறிப்பிடுகிறார் முனைவர் எம். எஸ். கோவிந்தசாமி ஐயா அவர்கள்.
முனைவர் எம். எஸ். கோவிந்தசாமி ஐயா அவர்கள், சில தொடர்புடைய சான்றுகள் இல்லாத காரணத்தினால் அவ்வாறு குறிப்பிடுகிறார்கள் என்பதை அறியமுடிகிறது. முதலாம் குலோத்துங்கச் சோழன் காலத்திய மதுராந்தகம் கல்வெட்டு கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது :-
"மதுராந்தகச் சதுர்வேதிமங்கலத்துப் பள்ளி செங்கேணி
சாத்தன் சொழனான ஸெநாபதிகள் வாணராஜர்
நம்மூர் எடுப்பித்த திருக்கற்றளி திருவெண்காடுடைய
மஹாதெவர்க்கு" (Line - 2).
"இச்சாத்தன் விரசொழனான வாணராஜர்" (Line - 3).
(S.I.I Vol-V, No.1003), (Kadapperi, Madurantakam Taluk, Svetaranyesvara Temple, Kulottunga Chola - I).
வாணர்களின் தலைநகராக விளங்கிய "மதுராந்தக வளநாட்டில்", வன்னிய குலத்தினில் வந்த "சேனாபதி வாணராஜர்" அவர்கள் திருவெண்காடு மகாதேவர்க்கு கற்கோயில் ஒன்றை கட்டியுள்ளார்கள் என்பதை முதலாம் குலோத்துங்கச் சோழனின் கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேலும் அக் கல்வெட்டு சேனாபதி வாணராஜரை, "வீரசோழனான வாணராஜர்" என்று தெளிவாக குறிப்பிடுகிறது.
முதலாம் ராஜ ராஜ சோழன் காலத்திலும், முதலாம் ராஜேந்திர சோழன் காலத்திலும், முதலாம் ராஜாதிராஜ சோழன் காலத்திலும், வாணர்குல அரசர்களை கல்வெட்டுகள் மிகத் தெளிவாக "சேனாதிபதி" என்றும் "வாணராஜர்" என்றும் அவர்களுடைய தலைநகரத்தை "வாணகப்பாடியான மதுராந்தக வளநாடு" என்றும் குறிப்பிடுகின்றன.
இதைப்போலவே முதலாம் குலோத்துங்கச் சோழனின் ஆட்சி காலத்திலும், வாணர்குல அரசர்கள் "வாணாதிராஜா" என்றும் "சேனாபதி" என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். மதுராந்தகவளநாடு அவர்களுடைய ஆளுமைக்கு உட்பட்டு இருந்திருக்கிறது. இதை மதுராந்தகம் கல்வெட்டு :-
"ஸ்ரீ மதுராந்தக சதுர்வேதிமங்கலத்துப் பள்ளி செங்கேணி சாத்தன் சோழனான சேனாபதிகள் வாணராஜர்" (S.I.I. Vol-V, No.1003, Line-2).
"வீரசோழனான வாணராஜர்" (S.I.I. Vol-V, No.1003, Line-3).
என்று குறிப்பிடுகிறது. வாணர் குல சேனாதிபதி "பள்ளி செங்கேணி" என்று தெளிவாக குறிப்பிடப்படுவதால், இவர்கள் "வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்தைச்" சேர்ந்தவர்கள் என்பது உண்மையாகிறது. மேலும் இக் கருத்தை உறுதிப்படுத்துவதற்கு அரியலூர் மாவட்டம் சென்னிவனம் கல்வெட்டும் துணைபுரிகிறது.
அரியலூர் மாவட்டம், சென்னிவனம் தீர்க்கபுரிஸ்வரர் கோயிலில் இருக்கும் இரண்டாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு ஒன்று (கி.பி. 1137) "பள்ளிச் சேந்தந் சுத்தமல்லனாந வாணகோவரையந்" என்ற "வாணர் குல குறுநிலமன்னரைப்" பற்றி குறிப்பிடுகிறது. (ஆவணம், இதழ்-20, பக்கம் 65 & 66).
வாணாதிராயர்களும், வன்னிய மன்னர்களான நீலகங்கரையர்களும் உறவினர்கள் என்பதை காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது.
வாணர்கள் தங்களை "க்ஷத்ரியர்கள்" என்று நந்திமலை செப்புப்பட்டயத்தில் குறிப்பிடுகிறார்கள். வாணர் குல அரசன் "மறவன் நரசிம்ம வர்மன் ஆன ராஜ ராஜ வாணகோவரையர்" தன்னை "வர்மன்" (க்ஷத்ரியர்) என்று தெளிவாக குறிப்பிடுகிறார்கள்.
வாணர்கள் தங்களை "சசி குலத்தவர்கள்" (சந்திர குல க்ஷத்ரியர்கள்) என்று குறிப்பிடுகிறார்கள். சாளுக்கியர்களும் தங்களை "சசி குல சாளுக்கியர்கள்" என்றே குறிப்பிடுகிறார்கள்.
சோழர்கள் காலத்தில் அரியலூர் பகுதியை அரசாட்சி செய்த வன்னிய குல மன்னர்களான "துண்ட நாடு உடையார்களை", வீர ராஜேந்திர சோழனின் கல்வெட்டு (கி.பி.1067) ஒன்று "பள்ளி கூத்தன் பக்கனான ஜெயம்கொண்ட சோழ துண்ட நாடாழ்வான்" என்று குறிப்பிடுகிறது.
வன்னிய மன்னர்களான "துண்ட நாடு உடையார்கள்", கல்வெட்டுகளில் "வாணகோவரையர்" என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களை வாணர்களின் மரபினர்களாகவே அறிஞர்கள் கருதுகிறார்கள்.
"துண்ட நாடு உடையான் ஏகவாசகன் குலோத்துங்கரான பிள்ளை வாணகோவரையர்"
"துண்ட நாடு உடையான் ஏகவாசகன் உலகு கண்டுவித்த பெருமாளான வாணகோவரையன்"
பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த வாணாதிராயர்கள் தங்களை "வன்னியர்கள்" என்றே குறிப்பிடுகிறார்கள். புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டுகள் இதை உறுதிப்படுத்துகின்றன. வன்னியர்களான வாணாதிராயர்கள் தங்களை "நெடுவாயில் சீமைக்கு கர்த்தா" (நெடுவாயில் சீமைக்கு தலைவன்) என்று குறிப்பிடுகிறார்கள் :-
"நெடுவாசலில் வன்னியரில் மாவலிவாணராயர்
மக்களில் பெற்ரு . . . கள் காலிங்கராயரும்"
(I.P.S. No.971), (ஆலங்குடி தாலுகா, கோவிலூர்).
"நெடுவாசல் சிமைக்குக் கறுத்தாவான பாண்டிய
பெருமாளான மாவுலிவாணாதராயர் மக்களில்
திருமெனியழகியரான குலசெகரக் காலிங்கராயரும்
பமையவனப் பெருமாளான சிவலக் காலிங்கிராயரும்"
(I.P.S. No.942), (ஆலங்குடி தாலுகா, அம்புக்கோவில்).
நெடுவாசல் சீமைக்கு தலைவர்களான இவர்கள், தங்களை வன்னிய வகுப்பினர் என்பதை தெளிவுபடுத்த "வன்னியரில் மாவலிவாணராயர்" என்று குறிப்பிடுகிறார்கள். இவர்கள் காலிங்கராயர் என்றும் பாண்டியநாட்டில் அழைக்கப்பெற்றார்கள் என்பதை "பாண்டிய நாட்டில் வாணாதிராயர்கள்" என்ற நூலை எழுதிய முனைவர் வெ. வேதாசலம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
எனவே மேற்குறிப்பிடப்பெற்ற மிகத் தெளிவான ஆதாரங்களின் மூலம் தெரியவரும் உண்மை என்னவென்றால், க்ஷத்ரியர்களான வாணாதிராயர் என்பவர்கள் "வன்னிய குல க்ஷத்ரிய" சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதுவே சான்றுகளின் அடிப்படையில் உண்மையாகும்.

2 comments:

  1. அடேங்கப்பா வாணர்களும் பள்ளிகள நெற்குன்றம் வான முதலி களப்பாளன் அயிற்றே கங்கை குலத்துமண் வாணன் பள்ளி சாதியாக போனதின் ரகசியம்,என்ன ?..... கொங்குப்பட்டயம் மாவலி வாணர்களை அகமுடையார் என்று சொல்லுதே ஒரு வேலை பட்டயம் பொய்யோ அப்போ சின்னமன்னுர் கல்வெட்டும் பொய்தான்........சி:>

    ReplyDelete
    Replies
    1. வாணகோவராயர் பற்றி மேலும் அறிய. தமிழில் கல்வெட்டு சான்றுடன் எதாவது புத்தகம் இருந்தால் சொல்லுங்கள்

      Delete