விஜயதசமி வன்னிமரம் அம்புகுத்தும் விழாவானது சங்ககாலத்தில் "பூந்தொடை விழாவாக" இருந்திருக்கிறது. இதை மழவர்களாகிய வன்னியர்கள் கொண்டாடியிருக்கிறார்கள் என்பதை சான்றுகள் உறுதிசெய்கின்றன. சோழர் காலத்து திருச்செங்கோடு செப்புபட்டையம், கொல்லி மழவர்களை "வர்மன்" (க்ஷத்ரியர்) என்று குறிப்பிடுகின்றன.
மழவர்கள் அரச வம்சத்தினர் என்பதை, சோழர்களின் ராஜமாதாவான "செம்பியன் மாதேவியின்" வரலாறு நமக்கு சான்றளிக்கிறது. "மழவர் கோனின் மகளான செம்பியன் மாதேவி" அவர்கள் வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்தைச் சேர்ந்த மகாராணியாவார்கள்.
கவிச் சக்கரவர்த்தி கம்பர் அவர்களும் சிலை எழுபது என்ற நூலில், வன்னியர்கள் விஜயதசமி நாளில் வில் விழா எடுத்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள். வன்னியர்களான காடவராய மன்னர்களும் விஜயதசமி வில்விழா திருநாளுக்கு கொடை வழங்கியிருக்கிறார்கள். இவர்களின் கிளை மரபினர்களான திருக்கணங்கூர் கச்சியராயர்களும் (கள்ளக்குறிச்சி அருகில் உள்ளது) ஆண்டுதோறும் "அம்பு குத்து விழாவை" சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.
விஜயநகர அரசர்களும் "விஜயதசமி வன்னிமரம் அம்புகுத்தும் விழாவுக்கு" கொடை வழங்கியிருக்கிறார்கள் என்பதை காஞ்சிபுரம் அருளாளப் பெருமாள் கோயில் (வரதராஜப் பெருமாள்) கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. அச்சுததேவமகாராயர் கல்வெட்டு (கி.பி.1530) ஒன்று கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது (காஞ்சிபுரம் மாவட்ட கல்வெட்டுகள்-3, தொடர் எண்-290) :-
"திருப்புரட்டாதி மாஸத்தில் நடக்கும் மஹாலக்ஷ்மி திருநாள் மற்றைநாள் விஜயதஸமியில் வன்னிமரம்குத்த பெருமாள் எழுந்தருளும் நாள்" (வரிகள் - 3).
"வன்னிமரம் குத்துகிறத்துக்கு பெருமாள் எழுந்தருளுகையில்" (வரிகள்-8).
என்று குறிப்பிடுகிறது. இதைப்போலவே, சதாசிவ தேவமகாராயர் கல்வெட்டு (கி.பி.1558) ஒன்றும் "மகாலக்ஷ்மித்திருநாள் வன்னிமர நாள்" என்று குறிப்பிடுகிறது (காஞ்சிபுரம் மாவட்ட கல்வெட்டுகள்-3, தொடர் எண்-250).
எனவே மேற்குறிப்பிடப்பெற்ற கல்வெட்டுகளின் மூலமாக தெரியவரும் உண்மை என்னவென்றால், "விஜயதசமி நாளில் வன்னிமரத்தில் அம்பு குத்தும் விழா" நடைப்பெற்றிருக்கிறது என்பதாகும். திண்டிவனம் முந்நூர், திருக்கோயிலூர் ஜம்பை போன்ற ஊர்களிலும் வன்னியர்கள் "அம்பு குத்தும் விழாவை" கொண்டாடுகிறார்கள்.
சங்க காலத்தில் வன்னிய சிறுவர்களுக்கு போர் பயிற்சி அளிக்கும் தொடக்கவிழாவாக "வன்னி மரத்தில் அம்புகுத்தும் விழா" (பூந்தொடை விழா) விளங்கியிருக்கிறது. அந்த வில் விழாவானது இன்றும் தொடருகின்றது என்பது நம்மையெல்லாம் மிகுந்த வியப்பில் ஆழ்த்துகிறது.
வன்னியர்கள் இந்த பண்டைய "பூந்தொடை விழாவினை" தங்களது இல்லங்களிலும், ஊர்களில் குழுவாகவும் கொண்டாடவேண்டும்.
No comments:
Post a Comment